வாழ்த்துரை அறிவியலை ஐயந்திரிபற அறிந்து தெள்ளத்தெளிவாகப் புரிந்து கொள்ள தாய்மொழிவழிக்கற்றலே சிறந்தது என்பதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. "தமிழா!!பயப்படாதே!ஊர்தோறும் தமிழ் பள்ளிக்கூடங்களை கண்டு, ஐரோப்பிய சாத்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்க...
வாழ்த்துரை அறிவியலை ஐயந்திரிபற அறிந்து தெள்ளத்தெளிவாகப் புரிந்து கொள்ள தாய்மொழிவழிக்கற்றலே சிறந்தது என்பதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. "தமிழா!!பயப்படாதே!ஊர்தோறும் தமிழ் பள்ளிக்கூடங்களை கண்டு, ஐரோப்பிய சாத்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்" என்ற வீரமுழக்கம் செய்த முண்டாசுக்கவிஞன் பாரதியின் கனவு இங்கு நினைவுகூறத்தக்கது. வேளாண்மையின் பல கூறுகளிலும் பல்லாயிரக்கணக்கில் ஆங்கில கிரேக்க இலத்தீன் சொற்கள் உள்ளன. அவற்றிற்கு நிகரான தமிழ் சொற்கள் என்ன என்பதை அறியாமலே கற்பித்து வருகிறோம். அனைத்து அருஞ்சொற்களுக்கும் அகராதியாக ஆக்கினால் மாணவர்கள் பேராசிரியர்கள் களப்பணியாளர்கள் உழவர்கள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு உறுதுணையாகஅமையும். இவ்வகையில் நூற்புழுவியல் அருஞ்சொல் அகராதி எனும் கையேட்டினை பணிநிறைவு பெற்ற நூற்புழுவியல் பேராசிரியர் முனைவர் ம.சிவக்குமார் மற்றும் நூற்புழுவியல் துறைத் தலைவர் முனைவர் அ. சாந்தி ஆகியோர் தொகுத்தளித்துள்ளமை பாராட்டுதற்குரியது. இவ்வகராதி, நூற்புழுவியல் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆய்வு மாணவர்கள் மற்றும் களப்பணி மேற்கொள்ளும் வேளாண் அலுவலகர்களுக்கும் பெருந்துணையாக அமையும் என்று கருதுகின்றேன். நமது பாரத திருநாட்டின் முதுகெலும்பான உழவர்களின் வாழ்க்கை தரம் உயர பணிமேற்கொள்ளும் ஆய்வாளர்கள், உழவர்கள் எளிதில் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் நல்ல பல தமிழ் கட்டுரைகள், செய்தி மடல் வெளியிட இக்கையேடு பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. இதனைத் தொகுத்தளித்த ஆசிரியர்களை மனதார வாழத்துகிறேன்.